நாடி ஜோதிடம் ஒரு பார்வை

 

ஜோதிடம் நமக்குத் தெரியும், அது என்ன நாடிஜோதிடம்?…

 

பொதுவாக, ‘நாடி ஜோதிடம்’ என்பதற்கு, நாடி ஜோதிட நிலையத்திற்கு நாடி வருபவர்களுடைய ஒலையினைத் தேடி எடுத்து, அவரவர்களுக்குரிய பலாபலன்களைக் கூறுவது என்பது பொருள். அதாவது நாடி ஜோதிடம் பார்க்க விரும்பும் ஒருவரது கைப் பெருவிரல் ரேகையினைக் கொண்டு, அவருக்கான சுவடியைத் தேடி எடுத்து அதன்மூலம் எதிர்கால வாழ்க்கையினைப் பற்றிக் கூறுவதே ‘நாடி ஜோதிடம்’ எனப்படுகிறது . ஒரு மனிதனின் (ஆண் என்றால் வலது கைப்பெரு விரல். பெண்ணாக இருப்பின் இடது கைப்பெரு விரல்) ரேகையினைக் கொண்டு பழங்கால ஔலைச்சுவடிகள் மூலம் ஆராய்ந்து நாடிஜோதிடர்கள் பலன்களைக் கூறி வருகின்றனர்.

இந்த நாடியில் அகத்தியர் நாடி, சுகர் நாடி, பிருகு நாடி, காக புஜண்டர் நாடி, சிவவாக்கியர் நாடி, நந்தி நாடி, வசிஷ்டர் நாடி, கெளசிகர் நாடி, சிவநாடி, விசுவாமித்திரர் நாடி, திருமூலர் நாடி, சுகர் மார்க்கேண்டயர் நாடி, அத்திரி நாடி, சப்த ரிஷி நாடி என்று பலவகை நாடிகள் காணக் கிடைக்கின்றன.

உண்மையில் நாடி என்பது என்ன?

நாடிஜோதிட ஓலைச்சுவடிகள்

இன்னின்ன கைப்பெருவிரல் ரேகை அமைப்பினை உடையவர்களின் எதிர்காலம் இவ்வாறு தான் இருக்கும் என்பதனை, சில நுணுக்கமான கணிதமுறைகள் மூலம் அக்கால முனிவர்கள்  ஆராய்ந்து, அக்குறிப்புகளை ஓலைச் சுவடிகளில் எழுதி வைத்தனர் என்றும், அதுவே இன்று தலைதலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டு நமக்குக் கிடைத்துள்ளது என்றும் நாடி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

நாடி ஜோதிடம் – காண்டம் பற்றிய விவரங்கள்

பொதுவாக நாடியில் மொத்தம் பன்னிரண்டு காண்டங்கள் உள்ளன. அவற்றின் மூலம் நமது எதிர்காலப் பலன்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவற்றை அறிய, முதலில், முதல் காண்டமான பொதுக்காண்டத்தினைப் பார்க்க வேண்டும் என்றும், அதில் ஒருவரைப் பற்றிய பொதுவான செய்திகள் காணப்படும் என்றும் கூறப்படுகிறது. அதாவது ஒருவரது பெயர், தொழில், மற்றும் குடும்ப விபரங்கள் போன்ற பொதுவான விஷயங்கள் பொதுக் காண்டத்தில் காணப்படும். திருமணம், குழந்தைகள், கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வழிபாடு போன்ற விரிவான பலன்களை அறிய அததற்கென உள்ள தனித்தனிக் காண்டங்களைப் பார்க்கவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

ஒரு மனிதனின் பிறப்பு முதல் ஆயுள் வரையிலான பொதுவான பலன்களை பொதுக் காண்டத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது ஜாதகர் பெயர், பெற்றோர் பெயர், சகோதரர்கள் விபரம், தொழில், திருமணம், நோய், கடன், பயணங்கள், சொத்து சேர்க்கை, எதிரிகள் தொல்லை போன்ற பொதுவான தகவல்கள் அதில் காணப்படும்.  இரண்டாவது காண்டம் மூலம் பணம், தவ வரவு, வாக்கு வன்மை, வாக்குப் பலிதம், கண் சம்பந்தமான நோய்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். மூன்றாவது காண்டம் சகோதரர் உதவி, ஜாதகரின் தைரியம், வீரம், வலிமை வெற்றி பற்றிக் கூறும். நான்காவது காண்டம் தாயாரின் உடல் நலம் பற்றிக் கூறும். ஐந்தாவது காண்டம் மூலம் பூர்வ புண்ணியம்பற்றி, புத்திரன் பற்றி அறிந்து கொள்ளலாம்.

 

ஆறாவது காண்டம் ருணம், நோய், கடன் பற்றியும், ஏழாவது களத்திரம் பற்றியும், எட்டாவது ஆயுள், கூட்டு பற்றியும், ஒன்பதாவது காண்டம் தெய்வ அருள், கர்மச் செயல்கள் பற்றியும் கூறும். மேலும்  தந்தை நலம், செல்வம், யோகம், ஆலய தரிசனம், குரு உபதேசம், இறைப் பணி பற்றியும் அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பத்தாவது காண்டம் வேல, தொழில் பற்றியும், பதினோராவது காண்டம் லாபம் பற்றியும், பனிரெண்டாவது காண்டம் மறுபிறவி, வெளிநாட்டு யோகம், அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள், அரசாங்கத் தொடர்புகள் பற்றி விளக்குவதாகும்.

 

இதுதவிர சாந்தி காண்டம், தீட்சை காண்டம், ஔஷத காண்டம், எல்லைக் காண்டம், அரசியல் காண்டம், பிரச்சன்ன காண்டம், மந்திர காண்டம், துல்லிய காண்டம், தசாபுக்தி காண்டம் என பல காண்டங்கள் உள்ளதாக நாடி ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சரி, நாடி ஜோதிடம் எப்படிப் பார்க்கிறார்கள்?…


தொடரும் 

நாடி ஜோதிடம் ஒரு பார்வை

  ஜோதிடம் நமக்குத் தெரியும் , அது என்ன நாடிஜோதிடம் ?…   பொதுவாக , ‘ நாடி ஜோதிடம்’ என்பதற்கு , நாடி ஜோதிட நிலையத்திற்கு நாடி வருபவர்களுட...